DhooL.com Song Of The Day

 

Home View All SOTDs View Recent SOTDs View Latest SOTD
SOTD Collections Discussion Thread FAQ Mailing List for updates

 

 

Song of the Day # 988

From: bb on: Wed Jan 14, 2009 12:02 am 

Song of the Day: kaNNil paarvai from naan kadavuL.

http://www.dhool.com/sotd2/988.html

Listen

எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

புது வருடம், புது ஆரம்பம். சென்ற வருடம் மிக வேகமாக சென்றுவிட்டது. பல நாட்களாயிற்று புதிதாக வந்த பாடல்களைக் கேட்டு. அவ்வப்போது டி.வியில் பார்த்தால் சரி. நேரம் கிடைத்த போதெல்லாம் கர்னாடக இசையையே கொஞ்சம் கேட்டேன். சினிமா பாடல்களைக் கேட்க ஏதோ ஒரு ஆயாசம். அப்படியே கேட்டாலும் பல்லவி முடிந்தவுடன் சரணத்தை கேட்க பொறுமை இல்லாமல் அடுத்த பாடலுக்கு செல்லும் அவசரம். அப்படி ஒரு சுழற்சி 2008-இல்.

புதிய வருடத்தில் விட்டதை பிடிக்கலாம் என்று ஆரம்பித்து பல பாடல்களை என் ஐபாடில் ஏற்றினேன். நீண்ட பயணம் ஒன்றில் எல்லா பாடல்களையும் கேட்க, மனதில் நின்றதோ இரண்டு பாடல்கள் தான். ஜோதா அக்பரில் "க்வாஜா"வும் நான் கடவுளில் "கண்ணில் பார்வை"யும்.

இந்த இடைவேளையில் ஒரு பாட்டை ரசிக்கும் தன்மையும் அதை சீர்தூக்கி பார்க்கும் விதமும் வெகுவாக மாறிவிட்டது போலத் தோன்றுகிறது. முன்பெல்லாம், ஒரு பாட்டில் இருக்கும் விஷயங்களை வைத்துத் தான் அதை எடை போட்டேன் போலும். அதில் வரும் பின்னணி இசையோ, பாடகர்களின் குரலோ, பாட்டின் வரிகளோ.. அவற்றை ஆழமாக கவனித்து ரசிப்பேன். எத்தனையோ பாடல்களை இளையராஜாவின் இசைக்காகவும் எஸ்.பி.பியின் குரலுக்காகவும் மணிக்கணக்காக கேட்டது இதனால் தான்.

இப்போதோ அதெல்லாம் முக்கியமில்லை என்பது போலத் தோன்றுகிறது. பாடல் என்னை பாதிக்க வைக்க இவை எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது, பாடலோடு முடிவடைவதில்லை. அதைத் தாண்டி, என்னுள்ளில் இருக்கும் ஏதோ ஒரு ஆழ்ந்த உள்ளுணர்வைத் தூண்டுகிறது. இது முற்றிலும் subjectiveஆன விஷயம். பாடலை ரசிப்பதில் உள்ள objectivity இம்மியளவு கூட இல்லாமல் மறைந்து போய் விட்டது போல ஒரு பிம்பம்.

"கண்ணில் பார்வை" ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல். இது போல எத்தனையோ பாடல்களை ராஜா இசையமைத்திருக்கிறார். சோகத்தை பிழிய வைத்து, உருக வைக்கும் ஆற்றல் கொண்ட பாடல்கள். ஆரம்பமே ஒரு ஒற்றை சாரங்கியின் மிதமான இசை. கண் பார்வையற்ற ஒரு பெண்ணின் சோகத்தை சொல்லும் சாதாரண வரிகள் (வாலிக்கு வாலண்டரி ரிடையர்மண்ட் தேவை!). இன்னும் செய்திருக்கலாமே என்று சொல்லத் தூண்டும் இசைக் கோர்ப்பு. சரணத்தை அடையும்போது ஏற்கனவே கேட்ட ஒரு ஆயாசம். இதையெல்லாம் objectiveஆக பார்த்தாலும், இதையெல்லாம் தாண்டி, ஆழ்மனதை தொட்டு, நான்கு நாட்களாக நினைவை விட்டு அகலாத பாட்டாகி விட்டது.

இம்மாதிரியான சோகப் பாடல்களை ரசிக்க அவற்றின் பின்புலமாக இருக்கும் படம் நம்மை பாதித்திருக்க வேண்டும். அப்படி ஆகாத போது, எத்தனை நன்றாக இருந்தாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சிங்காரவேலனில் கூடத் தான் ஒரு சோகப் பாடல் வரும். அதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும். "கண்ணில் பார்வை" கேட்கும்போது அதன் கூடவே இந்தப் படத்தைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பும் சேர்ந்து அதனால் தானோ என்னவோ மனதில் தங்குகிறது. பாலாவின் படங்களில் ஒரு காவிய சோகம் தென்படும். தன் தாய் தன்னை எப்போதும் கொலைகாரனாகவே பார்க்கும் மகனின் ஆதங்கம், நந்தாவின் கடைசி காட்சி வரை மையமாக வரும். தகனம் செய்யப்படும் உடல்களின் நடுவில் உறங்கும் சிறுவனின் பிம்பம், ஆரம்பத்திலேயே பிதாமகன் படத்தின் பின்புலமாக நிற்கும். பாலாவின் கதை மாந்தர்கள் விளிம்பு நிலை மனிதர்கள். ஜெயமோகனின் ஏழாம் உலகம் போல. ஏழாம் உலகம் சித்தரிக்கும் உலகம் நாம் அறியாத ஒன்று. அறிந்தாலும் அதன் அவலத்தைப் பற்றி நினைக்காமல் இருந்துவிடுவோம். நினைத்தால் தொண்டை வரண்டு விடும் அளவிற்கு உள்ள அவலம். அத்தகைய படமாக இருக்கும் "நான் கடவுள்". இது வரை இந்த படத்தை பற்றி படித்ததெல்லாம், இது ஏழாம் உலகத்தைப் போல ஒரு விளிம்பு நிலை சமுதாயத்தை சித்தரிக்கும் போலத் தோன்றுகிறது. காசியில் வாழும் அகோரிகளின் வாழ்க்கை இதற்கு முன் எந்த படத்திலும் நாம் பார்த்திராத ஒன்று. கங்கையில் மிதக்கும் பிணங்களின் மிச்சத்தை உண்ணும் அகோரிகர்களின் வாழ்க்கை தான் என்ன! (இதை அப்படியே நேரடியாக படத்தில் காட்ட முடியுமா என்பது சந்தேகம் தான்). நம்முடைய கோட்பாடுகளும் கலாச்சாரத்தின் வாயிலாக அவர்களை எடை போடும்போது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருப்பதனால் தானோ என்னவோ, "கண்ணில் பார்வை" பாடல் என்னை பாதித்துவிட்டது.

- TFMLover has the lyrics here: http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=7976

Discussion Page in DhooL on this Song

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=8017