DhooL.com Song Of The Day

 

Home View All SOTDs View Recent SOTDs View Latest SOTD
SOTD Collections Discussion Thread FAQ Mailing List for updates

 

Song of the Day # 709

From: bb on:  Sun Dec 04, 2005 11:28 pm

Jazz in Tamil Film Music - Part XII by Venkat

தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - பன்னிரண்டு

இன்னும் இரண்டு வாரங்களில் இந்தத் தொடர் முடியும் என்ற நிலையில் ஒரு தவிர்க்க முடியாத இடைவெளி. நான் ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல இளையராஜாவின் நீண்ட தமிழ்த் திரையிசை வரலாற்றில் மிகத்தாமதமாகத்தான் அவருடைய ஜாஸ் முயற்சி நடந்திருக்கிறது. இந்தத் தொடரை வாசித்துவரும் பலராலும் இதை நம்பவே முடியவில்லை. இன்னும் சிலபேர் புன்னகை மன்னன் (கவிதை கேளுங்கள்), மௌனராகம் (மன்றம் வந்த தென்றலுக்கு) போன்ற இளையராஜா பாடல்கள் ஜாஸ் வகையைச் சேர்ந்தவையா என்று கேட்டிருந்தார்கள். இல்லை. மன்றம் வந்த தென்றலுக்கு பாடலில் ஜாஸின் ஆதார வாத்தியமான சாக்ஸஃபோன் பிரதானமாக வருவதால் இதனை ஜாஸ் வகையைச் சேர்ந்ததைப் போன்ற குழப்பம் வரலாம். வெறும் இசைக்கருவியைத் தாண்டி ஜாஸின் ஆதாரமாக தட்டையான Blue Notes, Syncopation, improvisation போன்றவை எதுவுமே இதில் கிடையாது. மேலும் இந்தப் பாடல் ஆற்றொழுக்கைப் போன்ற சீரான மெட்டமைப்பைக் கொண்டது. நான் இந்தத் தொடரில் அடையாளம் காட்டிய பல பாடல்களைப் பார்த்தால் இவற்றில் பெரும்பாலானவை சற்றும் எதிர்பாரத திருப்பங்களைக் கொண்டவையாக இருக்கும். இதே காரணத்தால் இன்னும் சிலபேர் கேட்டிருந்த ஏ.ஆர். ரகுமானின் டூயட் படத்தின் எந்தப் பாடலும் ஜாஸ் வகையச் சேர்ந்ததில்லை என்று அறியமுடியும்.

நான் ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல மும்பை எக்ஸ்பிரஸின் இசை நம்மிடையே அதிகம் கவனிப்பைப் பெறாமல் போனது சோகமான விஷயம். இளையராஜா இதில் பல சோதனைகளைச் செய்துபார்த்திருக்கிறார். சில சமயங்களில் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இவர்களின் நிலை பரிதாபகரமானது. இவர்கள் சர்வசாதாரணமாக எந்த பிரயத்தனங்களூம் இல்லாமல் தங்களுக்கு
இயல்பாக வரும் மெட்டுகளையும் இசையையும் கொடுத்தால் (இளையராஜாவின் பல மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்கள் - பயணங்கள் முடிவதில்லை தொடங்கி, உதயகீதம், நான் பாடும் பாடல், இளமைக் காலங்கள், உன்னை நான் சந்தித்தேன்... எல்லாமே இப்படி அதிக சோதனைகள் இல்லாமல் Canonical Illayaraja வகையைச் சேர்ந்தவை) பாடல்கள் மிகப் பிரபலமாகின்றன. மறுபுறத்தில் கடுமையான முயற்சிகளூடன் பரீட்சார்த்தமாக, வித்தியாசமாக வரும் பல படங்கள் பெட்டிக்குள்ளே படுத்துக்கொள்கின்றன (ஈரவிழிக்காவியங்கள், நினைவெல்லாம் நித்யா, ...) . ஓரளவுக்கு மக்கள் இவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட வகை இசையை எதிர்பார்க்கத் தொடங்கியவுடன் எந்த
பரிசோதனையும் அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடுவதைப் போல் தோன்றுகிறது. என் கணிப்பில் இளையராஜா இந்தச் சிக்கலை மிகச் சாமர்த்தியமாகச் சமாளித்திருக்கிறார். அவருடைய பின்னணி இசையில் பல சோதனைகள் செய்யப்படுகின்றன. பின்னர் சில வருடங்கள் கழித்து அதேபோன்ற இசையமைப்பைக் கொண்ட பாடல் ஒன்று வருகிறது.

பாடல் : குரங்கு கையில் மாலை...
படம் : மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
பாடியவர்கள்: கமலஹாசன் மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா
Listen to the song


இந்தப் பாடலைக் கேட்டு பலரும் எரிச்சல் அடைந்ததாக என்னிடம் சொன்னார்கள். ஆனால் ஆரம்பம் தொட்டே இந்தப் பாடலின் புதுமை என்னைக் கவர்ந்தது. எந்தவிதமான மாறுபாடுகளும் இல்லாத
சமீபத்திய தமிழ்த் திரையிசையைக் கேட்டுவிட்டு இதைக் கேட்டதும் ஜாஸில் எனக்கு இருந்த ஓரளவு பரிச்சயமும் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. இந்தப் பாடலை முதல் முறை கேட்டவுடனேயே நான் நிமிர்ந்து உட்கார்ந்து தொடர்ச்சியாக நான்கைந்துமுறை திரும்பத்திரும்பக் கேட்டேன். இதில் இருக்கும் கருவிச் சேர்க்கை மிகவும் சிக்கலானது. இந்தத் தொடரைத் தொடர்ச்சியாகப் படித்துவரும் எவருக்கும் இதன் முன்னீடாக வரும் இசையின் ஜாஸ் வடிவம் எளிதில் புலப்படும். முதலில் கீபோர்ட், கிட்டாருடன், பித்தளைக் கருவிகளுடன் தொடங்கும் இசையில் ட்ரம்ஸ் இசை அதன் பின்னணியில் ரிதம் கொடுக்கச் சீராக வரும் பிறகு தனியே ட்ரம்ஸ் இசைக்கப்பட்டு குரலோசை தொடரும். இப்படி பல வாத்தியங்களில் சேர்க்கையில் ஒவ்வொரு வாத்தியமாக தனித்து வருவதும், குறிப்பாக ட்ரம்ஸ்க்கு ரிதம் சேர்ப்பு மற்றும் தனிஆவர்த்தனம் என்று இரட்டை பங்கு வருவதும் பெருங்குழு ஜாஸின் இசை வடிவங்கள்.

பாடலின் பல்லவியில் வரும் கீபோர்ட் மிக அற்புதமான வரிசையைக் கொண்டது. இன்னும் நாம் ஏற்கனவே கண்டதுபோல பாடகரின் குரலை ஒரு இசைக் கருவியைப் போலப் பயன்படுத்தும் ஜாஸ் வழக்கத்தைப் பல்லவியிலேயே காணமுடிகிறது. இதைத் தொடர்ந்து முதல் இடையீட்டிலும் குரலோசை ஒரு கருவியைப் போலப் பயன்படுத்தப்படுவதைக் கேட்கலாம். இரண்டாவது இடையீட்டில்
(மிகச் சுருக்கமானது) இதிலிருந்து மாறுபட்டு இருக்கிறது. மூன்றாவது இசையில் பெருங்குழு வடிவத்தில் பித்தளைக் கருவிகள், தொடர்ந்து ட்ரம்ஸ், பின்னர் இவற்றின் சேர்க்கை என்றும் அதைத் தொடர்ந்து கீபோர்ட்க்கும், ட்ரம்பெட்டுக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது. இந்த இடையீடு மிக நீளமானது. இன்னொரு முக்கியமான விஷயம் இந்தப் பாட்டின் வரிகளுக்கு நம்மூரில் வழக்கமாக வரும் பல்லவி அனுபல்லவி அமைப்பு கிடையாது. மிகச் சில வரிகளே பல்வேறு சுருதிகளில் மாற்றி மாற்றி இசைக்கப்படும். இதுபோன்ற சிக்கலான அமைப்புகள் நம் பாடல்களில் அதிகம் வருவதில்லை.

பாடல் : குரங்கு கையில் மாலை... (Alternate Take)
படம் : மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
பாடியவர்கள்: கமலஹாசன் மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா
Listen to the song


சற்றே நீளமான இந்த இரண்டாவது வடிவம் தமிழுக்கு மிக மிக வித்தியாசமானது. ஜாஸின் ஆதாரமே வடிவத்தைப் புரிந்துகொண்டு கலைஞர்கள் தன்னிச்சையாக இசைப்பதுதான். எனவே பல ஜாஸ் ஆல்பங்களில் பார்த்தீர்களானால் ஒரே பாடல் ஒன்றுக்கு மேற்ற வடிவங்களில் இருக்கும். இதை First Take, Alternate Take என்றெல்லாம் குறிப்பார்கள். இதற்கு முக்கிய காரணம்
என்னவென்றால் முதலில் பதிவு செய்தவுடன் போட்டுக் கேட்க கலைஞர்களுக்கு அவ்வளவாக திருப்தி இல்லாமல் இருக்கும் எனவே வேறு ஒரு முயற்சியில் ஈடுபடுவார்கள். பின்னர் அதை முடித்தபிறகு கேட்டுப் பார்த்தால் இரண்டாவதாக எடுக்கப்பட்டிருப்பதில் சில இடங்கள் நன்றாக இருந்தாலும் தன்னிச்சையான முதல் முயற்சியில் சில இடங்கள் அற்புதமாக அமைந்திருக்கும். இதையெல்லாம் அழித்து அழித்துத் திருத்திக் கொண்டிருக்காமல் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களை இரசிகர்களின் தெரிவுக்கு அப்படியே கொடுத்துவிடுவார்கள். தெலோனியஸ் மாங்க், சார்லி பார்க்கர், மைல்ஸ் டேவில் ஜான் கொல்த்ரேன், போன்ற மேதைகளின் பல இசைத்தட்டுக்களில் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களைக் காணலாம். இப்பொழுது வரும் ஜாஸ் இசைத்தட்டுக்களில் இது குறைந்துபோயிருக்கிறது.

இந்த காலத்து ஏ.ஆர். ரகுமானின் ஆறுமாத கணினி வெட்டியொட்டும் முயற்சிக்கு நேரெதிராக இந்த Original Take, Alternate Take வடிவங்கள் இருப்பதைக் காணமுடியும். இதுதான் ஜாஸின் சிறப்பு அதிகச் சிக்கல்கள் இல்லாமல், சித்து வேலைகள் இல்லாமல் ஆழ்மனத்திலிருந்து வரும் இசையின் வடிவம் ஜாஸ்.

Discussion Page in DhooL on this Song

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3760